"Tiada apa yang akan terjadi melainkan Kehendak-Nya"
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!
விளக்கம் :
திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதர் அருள்புரிகிறார். வாழும் காலத்தில் பல இன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டி இறைவனிடம் நாம் வேண்டுகிறோம். ஆனால், அவையெல்லாம் நம் உடலுக்கு தற்காலிக சுகமே தரும். ஆத்மாவுக்கு சுகம் வேண்டுமே! என்ன செய்வது! ஆத்மநாதராகிய சிவபெருமானைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். மாணிக்கவாசகர் பாண்டியநாட்டின் மந்திரியாகவே இருந்தவர்! அவர் அனுபவிக்காத போகங்களா? ஆனால், இறைவன் அவரை என்ன செய்தான்? போர்ப்படைக்கு குதிரை வாங்கும் சாக்கில் தன் தலத்துக்கு வரவழைத் தான். உண்மையான இன்பம் என்ன என்பதை அறிய வைத்தான். அமிழ்தினும் இனிய திருவாசகத்தை எழுத வைத்தான். அவரை ஆட் கொண்டான். நாமும் அவரது கவியமுதத்தில் மூழ்கி எம்பெருமானின் திருவடிகளை அடைவோமே! இத்தலம் அறந்தாங்கி அருகில் உள்ளது.