"Tiada apa yang akan terjadi melainkan Kehendak-Nya"
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர் களு மாக ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறை வனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.
விளக்கம் :
பள்ளியறை என்ற வார்த்தை மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் கண் மூடினால் நிலைமை என்னாகும்? இருந்தாலும், அன்பின் காரணமாக அவனுக்கும் ஓய்வு கொடுப்பதாக நினைத்து பள்ளியறையில் உறங்க வைக்கிறோம். ஆனால் நிஜத்தில், பள்ளியறை என்றால் விழிப்புக்குரிய இடம். இதனால் தான் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்தார்கள். கல்வியில் விழிப்புடன் இருப்பவர்கள் உலகில் சிறப்பிடம் பெறுவார்கள். அதுபோல், பக்தியில் விழிப்பு நிலையில் உள்ளவன் இறைவனின் திருப்பாதத்தை அடைவான்.