"Tiada apa yang akan terjadi melainkan dengan Kehendak-Nya"
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான் (இந்திரனின் திசை கிழக்கு). உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.
விளக்கம் :
இங்கே தாமரையை சிவனாகவும், அதைத் தேடி தேன் குடிக்க வரும் வண்டுகளை தேவர்களாகவும் உருவகம் செய்கிறார் மாணிக்கவாசகர். பிரம்மா, சரஸ்வதி, ருத்ரன், அம்பாள் உள்ளிட்ட பல தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனின் தரிசனத்துக்கு காத்து நிற்கிறார்கள். இந்த தேவர்களே வண்டுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். நாமும், பிறப்பற்ற நிலை என்னும் தேன் அருந்த அந்த சிவபெருமானின் திருவடிகளை வண்டுகளைப் போல் பணிவோம்.