"Tiada apa yang akan terjadi melainkan Kehendak-Nya"
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.
விளக்கம் :
இறைவன் எளிமையானவன். அவன் பங்களாவாசிகளுக்கு மட்டுமல்ல, ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்கள் வீட்டுக்கும் பவனியாக வருவான். அவனை வணங்க எதுவுமே வேண்டாம். நல்ல உள்ளம் இருந்தால் மட்டும் போதும் என்பது இப்பாடலின் உட்கருத்து.